Sunday, July 26, 2009

பீகார் சம்பவம்-இதுவும் தீவிரவாதமே!


சென்ற இரண்டு நாட்களாக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படுகிற ஒரு காட்சி, மனிதாபிமானம் உள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு *’நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நாடா? காடா?’ *என்ற கேள்வியை எழுப்பியிருக்கும்.


பீகார் தலைநகரம் பாட்னாவில், பொது இடத்தில் ஒரு 22 வயது பெண்ணை ஒரு கும்பல் மானபங்கப்படுத்திய கொடூரக் காட்சியைக் கண்டவர்கள் நிச்சயமாக மனம் கொதித்திருப்பார்கள். வட இந்தியாவில் பீகார், உத்திரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிராக அதிகபட்ச வன்முறைகள் நடந்தேறுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கல்வியறிவின்மை, மூடப்பழக்க வழக்கங்கள், சட்ட ஒழுங்கை நிர்வகிக்க முடியாத காவல்துறை, லஞ்சம் ஊழல் புரையோடிக்கிடக்கிற அரசு இயந்திரம், அரசியல் குறுக்கீடு என்று இந்தியாவைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சமூக அவலங்கள் இம்மாநிலங்களில் பிற மாநிலங்களை விடவும் தீவிரமாக, பயங்கரமாக தனது கோரத்தாண்டங்களை நடத்தி வருகின்றன.


பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நடத்தை குறித்து சில கேள்விகளை எழுப்பி, இந்த சம்பவத்தை நியாயப்படுத்த ஒரு ஹிந்தித் தொலைக்காட்சியில் சிலர் முயன்றதைப் பார்த்தபோது ஆத்திரம் பொங்கியது. ஒரு விவாதத்துக்காக, அந்தப் பெண் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் கூட, அவளிடம் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ள யாருக்கு உரிமை இருக்கிறது? இருபது நிமிடங்கள் நடந்தேறிய இந்த சம்பவத்தைப் படம்பிடித்துக்கொண்டிருந்த பத்திரிகைக்காரர்கள் கூட, அந்தச் சம்பவத்தை வைத்துப் பரபரப்பை ஏற்படுத்தத் தானே முயன்று கொண்டிருந்தது போலத் தெரிகிறது? அங்கு ஒரு பெண்ணைச் சுற்றிவளைத்து அவளை அவமானப்படுத்திய கும்பலில் இருப்பவர்களுக்கு, இதே பரிதாபகரமான நிலை நாளை அவர்களைப் பெற்ற தாய், உடன்பிறந்த தந்தை, கட்டிய மனைவி, பெற்ற மகள் இவர்களுக்கும் வரலாம் என்று ஏன் புரியாமல் போனது?


ஒரு பெண் குடியரசுத்தலைவராக, ஒரு பெண் ஆளுங்கட்சித்தலைவியாக, ஒரு பெண் மக்களவை சபாநாயகராக, இன்னும் சில பெண்கள் சில மாநிலங்களில் முதலமைச்சர்களாகப் பணி புரிந்து வரும் நம் நாட்டில், தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு என்ன காரணம், இதற்கு என்ன தீர்வு என்று இனி வருகிற காலத்தைக் கருத்தில் கொண்டு, இப்போதிருக்கிற சட்டங்களை விடவும் கடுமையான அச்சுறுத்துகிற சட்டங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டும்.


*தீவிரவாதத்திற்கு எதிராக, ’தடா’ ’பொடா’ போன்ற சட்டங்களைக் கொண்டு வருகிற அரசுகள், இதே போல கடுமையான சட்டங்களை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் இயற்ற வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. *


ஒரு பெண்ணின் கவுரவத்தைக் காப்பாற்ற முடியாத அரசுகள், மறைமுகமாக பெண்களுக்கு எதிரான சக்திகளுக்கு ஊக்கமளிக்கின்றன என்று தான் வருங்கால சரித்திரத்தில் இடம் பெறும்.


இந்த தேசிய வெட்கக்கேட்டை என்னவென்று சொல்வது? இதுவும் ஒரு விதமான தீவிரவாதம் தானோ?